Natural  

  Stay Connect...!!! 

இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரி..!!!

இயற்கை எழில் கொஞ்சும் இந்தியாவின் கடைக்கோடி மாவட்டம் தான் கன்னியாகுமரி. இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் என முக்கடலும் சங்கமிப்பது இதன் சிறப்பு. தமிழ்நாடு, கேரளா இரு மாநில எல்லையில் இருப்பதால் மொழி, உணவு, உடை என எல்லாவற்றிலும் இரு மாநில பாதிப்புகளையும் காண முடியும்.இதன் பரப்பளவு - 4,433 சதுர கி.மீட்டர் ஆகும்.மேலும் சென்னையிலிருந்து சுமார் 700 கி.மீட்டர் தூரத்தில் கன்னியாகுமரி அமைந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம்,தமிழ் நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்று ஆகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இது தமிழகத்தின் மூன்றாவது வளர்ச்சியடைந்த மாவட்டமாகும்.

இயற்கை அழகுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக தமிழகத்தின் நெல்லை மாவட்டமும் திகழ்கிறது.

 வரலாறில் கன்னியாகுமரி 

வட வேங்கடம் முதல் தென் குமரி வரையுள்ள பகுதி, தமிழ் கூறும் நல்லுலகம் என்று தொல்காப்பியத்திற்கு முன்னுரை வழங்கிய அதங்கோட்டாசான் குறிப்பிடுகிறார். கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இருந்த ஏராத் தோனஸ் என்ற அயல்நாட்டுப் பயணி குமரிமுனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெரிபுளூஸ், தாலமி இப்பகுதி பற்றி தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். மதுரை தொடங்கி குமரி வரையுள்ள பகுதி 'பாண்டி மண்டல'மாக இருந்தது. அதனால் இப்பகுதிபாண்டியர்களால் ஆளப்பட்டு வந்தது. இதற்கான சான்றுகளாக காட்டக்கூடிய ஊர்கள்: பாண்டியன் அணை, பாண்டியன் கால்வாய், பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம் என்ற பெயர்களால் உறுதிப்படுத்தப்படுகிறது. பாண்டிய பேரரசு குலைந்த பின்னர் இப்பகுதி மூன்றாகத் திகழ்ந்தது. 1) புறத்தாய நாடு (கன்னியாகுமரியும் அதன் சுற்றுப்புறங்களும் சேர்ந்த பகுதி) 2) நாஞ்சில் நாடு (அகத்தீஸ்வரம், தோவாளை வட்டங்களில் புறத்தாய நாடு நீங்களான பகுதி) 3. வேணாடு (கல்குளம், விளவங்கோடு) என்னும் இரு வட்டங்களையும் கொண்டது. முதலாம் இராசராச சோழன் ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் சோழராட்சிக்கு உட்பட்ட வேளையில் இப்பகுதியும் சோழராட்சியின் கீழ் வந்தது. சேரநாட்டின் பாஸ்கர ரவியை தோற்றோடச் செய்து, அவன் கப்பற்படையைத் தீயிட்டு பொசுக்கினான் இராஜராஜன். அதனால் இராசராச சோழனுக்கு 'கேரளாந்தகன்' (கேரளனுக்கு எமன்) என்ற பட்டப்பெயர் ஏற்பட்டது. சோழர்களின் கல்வெட்டு குகநாதசாமி கோயிலில் கிடைக்கிறது. இதுதவிர, மும்முடிச் சோழபுரம், சோழ கேரளபுரம், ராஜ நாராயண சதுர்வேதி மங்கலம், சுந்தர சோழசதுர்வேதி மங்களம் போன்ற ஊர்களின் பெயர்கள் சோழராட்சிக்கு சான்றாகும். நாஞ்சில் நாட்டு வளம்- நாயக்கர்களால் பலமுறை கொள்ளையிடப்பட்டது. திப்பு சுல்தானின் படையெடுப்பையும் இப்பகுதி கண்டிருக்கிறது. 1729 முதல் 1949 வரை இப்பகுதி திருவிதாங்கூர் மன்னராட்சியில் இருந்து வந்தது. 1945 இருந்து 1956 வரை குமரி மாவட்ட தமிழர்கள் போராடி, சில பகுதிகளைப் பெற்று தமிழ்நாட்டுடன் இணைந்தனர்.

 

 மாவட்டத்தின் எல்லைகள்: வடக்கிலும், கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டம். மேற்கில் கேரளமும்; தெற்கில் இந்துமகா கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன.


இந்தியாவின் தென்கோடி முனையாக காட்சியளிக்கிறது. இவ்வூரிலேயே காலையில் சூரியோதயத்தையும், மாலையில் மறைவையும் கண்டு களிக்கலாம். சித்ரா பெளர்ணமியன்று சூரியன் மறைவதையும் சந்திரன் பெரிய பந்து போலத் தோன்றுவதையும் வேறு எங்கும் காண முடியாது. இந்துமகாக் கடல், வங்காள விரிகுடா, அரபிகடல் இவை மூன்றும் சங்கமமாவது இங்குதான். குமரித் துறையில் உள்ள கன்னியாகுமரியின் கோவில் பார்க்கத்தக்கது. கடல் நடுவில் உள்ள பாறைவிவேகானந்தரின் நினைவுப் பாறை என்று அழைக்கப்படுகிறது. 1892 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் இங்கு வந்து ஸ்ரீபாத பாறையில் அறிவு விளக்கம் பெற்று சென்றதை நினைவு கூறும் வண்ணம் இங்கு 1970 ஆம் ஆண்டு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இது போலவே காந்தியண்ணலின் அஸ்தி கரைக்கப்பட்டதை நினைவு கூறும் வண்ணம், வட இந்திய பாணியில் இங்கு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அண்ணாவின் பிறந்த நாளான அக்டோபர் 2ந் தேதி சூரிய ஒளி இங்குள்ள மண்டபத்தில் விழும்படி கட்டப்பட்டுள்ளது. குகநாதசாமி கோயில் பழைமையானதாகும். இக்கோவிலில் இராசராசன் காலத்து கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அடுத்து பார்க்க வேண்டியது அரசு அரும்காட்சி சாலை. கலங்கரை விளக்கத்திலிருந்து இயற்கை காட்சிகளையும், கடற்காட்சிகளையும் காணலாம்.

 மருத்துவ வரலாறு....

இம்மாவட்டத்துக்கு இயற்கை பல அரிய மூலிகை வகைகளையும் தாது வளங்களையும் தாங்கும் மலைகளையும் நன்கொடையாகத் தந்திருக்கிறது. கன்னியாகுமரிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மருந்துவாழ் மலை அசோகர் காலகட்டத்தில் வாழ்ந்த புத்த பிக்குக்களால் மருத்துவ மற்றும் ஆன்மீக பாரம்பரியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் உள்ளன.

மேலும் செந்தமிழின் முதல் இலக்கண ஆசிரியரும், முதல் சித்தருமான அகத்தியர் இந்நிலப்பரப்பின் எல்லையில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இப்பகுதியில் அகத்தீஸ்வரம் என்னும் ஊரும் உள்ளது. இவ்வூருக்கும் இப்பெயர் ஒரு குறு முனிவரிடமிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவ்வூரில் அகஸ்தீஸ்வரால், அகஸ்தீஸ்வரமுடையாருக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு கோயிலுமுள்ளது. மருத்துவம், இலக்கணம் மட்டுமல்லாமல் வர்ம சாஸ்திரத்திலும் அகத்தியர் திறம்படைத்தவராவார். பிரபல பனை ஓலை எழுத்தாக்கங்களான வர்மாணி, வர்ம சாஸ்திரம் ஆகியன அவரால் இயற்றப்பட்டவைகளாகும். இன்றும் இந்த வர்ம வைத்திய முறைகள் கன்னியாகுமரிப் பகுதிகளில் குரு-சிஷ்ய முறையில் கற்பிக்கப்படுகிறது. மேலும் இந்த தமிழ் வைத்திய முறையை பயன்படுத்தி இத்துறையில் வல்லுனர்களால் மருத்துவம் செய்யப்படுகிறது.

Mathicode
UA-48738308-1