Natural  

  Stay Connect...!!! 

 சுற்றுலா இடங்கள்:

கன்னியாகுமரி:

இந்தியாவின் தென்கோடி முனையாக காட்சியளிக்கிறது. இவ்வூரிலேயே காலையில் சூரியோதயத்தையும், மாலையில் மறைவையும் கண்டு களிக்கலாம். சித்ரா பெளர்ணமியன்று சூரியன் மறைவதையும் சந்திரன் பெரிய பந்து போலத் தோன்றுவதையும் வேறு எங்கும் காண முடியாது. இந்துமகாக் கடல், வங்காள விரிகுடா, அரபிகடல் இவை மூன்றும் சங்கமமாவது இங்குதான். குமரித் துறையில் உள்ள கன்னியாகுமரியின் கோவில் பார்க்கத்தக்கது. கடல் நடுவில் உள்ள பாறைவிவேகானந்தரின் நினைவுப் பாறை என்று அழைக்கப்படுகிறது. 1892 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் இங்கு வந்து ஸ்ரீபாத பாறையில் அறிவு விளக்கம் பெற்று சென்றதை நினைவு கூறும் வண்ணம் இங்கு 1970 ஆம் ஆண்டு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இது போலவே காந்தியண்ணலின் அஸ்தி கரைக்கப்பட்டதை நினைவு கூறும் வண்ணம், வட இந்திய பாணியில் இங்கு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அண்ணாவின் பிறந்த நாளான அக்டோபர் 2ந் தேதி சூரிய ஒளி இங்குள்ள மண்டபத்தில் விழும்படி கட்டப்பட்டுள்ளது. குகநாதசாமி கோயில் பழைமையானதாகும். இக்கோவிலில் இராசராசன் காலத்து கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அடுத்து பார்க்க வேண்டியது அரசு அரும்காட்சி சாலை. கலங்கரை விளக்கத்திலிருந்து இயற்கை காட்சிகளையும், கடற்காட்சிகளையும் காணலாம்.

 நாகர்கோவில்:

கன்னியாகுமரியிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் தலைநகராகவும் இருக்கிறது.

 

 நாகர்கோவில் நகராட்சி 1900 ஆம் ஆண்டளவில் ஏற்பட்டது. இந்நகராட்சியின் பகுதிகள் வடசேரி, வடிவீஸ்வரம், கோட்டாறு, ஒழுகினசேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. பல கல்வி நிலையங்கள் மருத்துவமனை, போக்குவரத்திற்கும் மையமாக இருக்கின்றது. மாவட்டத் தலைநகரானதால் தொழில், வணிக நிலையமாகவும் விளங்கி வருகிறது.

 உதயகிரி கோட்டை:-

மார்த்தாண்ட வர்மா (1729-1758) காலத்தில் இக்கோட்டை கட்டப்பட்டது. இக்கோட்டையில் துப்பாக்கி வார்ப்பதற்கானதொழிற்சாலை இருந்தது. இங்கு டிலனாய் என்ற டச்சு வீரர் மார்த்தாண்ட வர்மா படையில் சேர்ந்து, உள்நாட்டு வீரர்களுக்கு படைபயிற்சியளித்து வந்தார். அவருடைய கல்லரை இங்கு காணப்படுகிறது. இக்கோட்டை நாகர்கோவில்- தக்கலை வழித் தடத்தில் உள்ளது. கன்னியாகுமரியிலிருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 90 ஏக்கர் நிலப்பரப்பில், 5 1/2 மீ உயரத்திற்கு சுவர்கள் எழுப்பப்பட்டு, 4 1/2 மீ அகலத்தில் சுவர்களை அமைத்துள்ளனர். இக்கோட்டையின் உயர்ந்த பகுதியில் 'விருந்தினர் இல்லம்' இருக்கிறது.

வட்டக்கோட்டை:

குமரி மாவட்டத்திலுள்ள இரண்டாவது கோட்டை இது. கன்னியாகுமரியிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இதுவும் மார்த்தாண்ட வர்மா காலத்தில் டிலனாயினால் கட்டப்பட்டது. இக்கோட்டையின் சிறப்பு, கடலை நோக்கி அமைந்திருப்பதுதான். இது கடற்குளியலுக்கும் சுற்றுலாவுக்கும் ஏற்ற இடம்.

திப்பரப்பு அருவி:

கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. கோதையாற்றின் கரையில் அமைந்துள்ளது. நீர்வரத்து அதிகம் உள்ள காலங்களில் அருவி அழகாகக் காணப்படும். இங்கு ஆறு, அருவி, கோவில் மூன்றும் ஒருசேர பார்ப்பதற்கு அழகான காட்சிகள் ஆகும். 

முட்டம்:

கன்னியாகுமரியிலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர் கடலை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு அழகான கடற்கரையும், கலங்கரை விளக்கமும் உண்டு. சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. ஊருக்குள் கடல் உள்நோக்கி அரைவட்ட வடிவத்தில் அமைந்திருப்பதாலும் ஊர் மிக உயரத்திலிருப்பதாலும் உடல் நலத்திற்கேற்ற வாழ்விடமாக இது அமைந்துள்ளது.

பேச்சிப்பாறை:-பெருஞ்சாணி அணை:

கன்னியாகுமரியிலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கும் எல்லையாகஅமைந்துள்ள மலைத் தொடரை வைத்து இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் பெரிய அணை இதுவேயாகும். 1894 ஆம் ஆண்டு கோதையாறு அணைத்திட்டம் தொடங்கப்பட்டு 1905 இல் சுமார் 27 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. கோதையாறு அணையே பேச்சிப்பாறை அணை எனப்படுகிறது. இத்தேக்கத்தில் 350 கோடி கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடிகிறது. இதன் மூலம் சுமார் 56,000 ஏக்கர் நிலம் பாசனம் பெற இயலுமென்று கூறப்படுகிறது. நாஞ்சில் நாட்டை நெற்களஞ்சியம் ஆக்குவதற்கு இந்த அணை பெரிதும் உதவுகிறது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு படகு செலுத்துதல் சுகமான அனுபவமாகும். அணையின் எதிர்ப்புறம் வரை செல்ல குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

   

பெருஞ்சாணி அணை:

இந்த அணை கன்னியாகுமரியிலிருந்து 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதுவும் ஒரு சுற்றுலாத்தலமாகும். இந்த அணை 1948 இல் தொடங்கப்பட்டு 1958இல் முடிக்கப்பட்டது. 50 இலட்சம் ரூபாயில் செலவில் கட்டப் பட்டது.இந்த அணையில் உண்டாக்கப்பட்ட நீர்த்தேக்கம் 33.34 சதுர மைல் பரப்பாகும். இந்நீர்த் தேக்கம் திருவனந்தபுரத்தின் தென்கிழக்கு, 58 கி.மீ. தொலைவிலும், குலசேகரம் என்னு மிடத்திலிருந்து 10 கி.மீ.கிழக்கிலும் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் 6000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.

கீரிப்பாறை: காளிகேசம்:

பெருஞ்சாணி அணையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கீரிப்பாறை இருக்கிறது. இது வரை பேருந்து செல்லும். கீரிப்பாறையின் கொடுமுடி காளிகேசம் என்ற இடத்தில் சிறு அம்மன் கோவில் உள்ளது.

கீரிப்பாறையிலிருந்து மேலே செல்வதற்கு நல்ல வண்டித்தார்ச்சாலை உள்ளது. சிற்றுந்துகள் மூலம் போகலாம். இங்குள்ள ஆறு மலைச் சரிவுகளில் விழுந்தோடி வருவதைத்தான் காளிகேசம் என்கின்றனர். சிறுசிறு சரிவுகளில் அருவியாகவும் காட்சியளிக்கிறது. பாறைகளைக் குடைந்தும், அறுத்துக் கொண்டும் ஓடுவது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும். ஆறு அறுத்த பாறை ஒன்றில் பழங்குடியினர் இருந்த தற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன.

பத்மநாபபுரம்:

கன்னியாகுமரியிலிருந்து 45 கி.மீ. உள்ளது. மன்னர் கால திருவாங்கூரின் தலைநகராக கி.பி. 1744 முதல் இருந்தது. அரண்மனை 6 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த அரண் மனையில் அரசர், அமைச்சர், அலுவலர்களுக்கு, பல கட்டடங்கள் இருக்கின்றன. இங்குள்ள இராமசாமி கோவிலில் இராமாயணக் கதை 45 காட்சிகளாக சித்தரிக்க ப்பட்டுள்ளது. இந்த அரண்மனை காலை ஒன்பது மணிமுதல் மாலை 5 வரை திறந்திருக்கும். திங்கள் விடுமுறை.

இங்கு காணவேண்டியவை:

இந்திர விலாசம், தாமிரக் கடிதங்கள், கல்வெட்டுகள், பழங்கால நாணயங்கள், போர்க்கருவிகள் போன்றவை காட்சிக் கூடத்தில் உள்ளன. இதுதவிர, ஒரே மரத்தால் செய்யப்பட்ட சன்னல், வேனிற்காலத்தில் அரசர் படுக்கும் கல்கட்டில், பெரிய விருந்து மண்டபம், ஒரே மரத்தில் செய்யப்பட்ட தூணும் அதில் கடைந்தெடுத்த வளையமும், தூண்ட மணிவிளக்கு, சித்த மருத்துவக் கட்டில், அரசரின் வாள், நீராடுமிடம், பெரிய விலங்கும் காணத்தக்கவை. 17ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட கடிகாரம் புகழ்பெற்றது. இது தவிர ஓவியக்கூடம் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம். இங்கு திருவிதாங்கூர் அரசர் முடிசூட்டு விழா, திப்புவின் தோல்வி, நாஞ்சில் நாட்டுத் தமிழர்களால் மன்னர் காப்பாற்றப்பட்டது போன்ற சம்பவங்கள் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

சுசீந்திரம்:

கன்னியாகுமரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தாணுமாலயன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. தமிழகப் பெருங்கோவில்களில் இது முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. 135 அடி உயரமுள்ள கோபுரமும் எழுநிலை மாடமும் உடையது. இக்கோவிலில் சோழ, சேர, பாண்டிய, விஜய நகர மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்நால்வரும் திருப்பணி செய்துள்ளனர். இக்கோவில் 9ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டதென கல்வெட்டு கூறுகிறது. அலங்கார மண்டபத்தின் கூரை ஒரே கல்லாலானது. இம்மண்டபம் சிற்பச் சிறப்புடையது. இராசராசசோழன் காலத்தில் கட்டப்பட்டது.  இங்குள்ள திருமலை நாயக்கர் வடிவத்தில் காணப்படும் சிற்பத்தின் மூக்கில் வெளிவரும் அளவு நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளதைக் கண்டுகளிக்கலாம். நாட்டிய நங்கை, வெற்றிலை மடித்துத் தரும் மங்கை, குடைபிடித்த கட்டழகி போன்ற சிலைகள் உயிர் உள்ளவை போன்று இருக்கும். இதுதவிர, ஊஞ்சல் மண்டபம், சித்திரசபை, வசந்த மண்டபம், , பாவைப் பெண்களின் அரிய கலை வடிவங்கள், இந்திரனின் கதை கூறும் சுவரோவியங்கள் போன்றவை காணத்தக்கவை.
UA-48738308-1